எதுவரைக்கும் கடவுளே? (How Long O God?)
எதுவரைக்கும் கடவுளே?
(How Long O God)
சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும். உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். அப்பொழுது இரட்சிக்கப்படுவோம் (சங்கீதம் 80:3).
(From Bower Translation)
படைகளின் கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும் (திருப்பாடல்கள் 80:3)
(திருவிவிலியத்திலிருந்து)
80ஆம் சங்கீதம் ஒரு சமுதாயப் புலம்பற் பாடலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரயேல் நாடு, சமாரியாவின் வீழ்ச்சிக்குப் பின் நடைபெற்ற அசீரியப் படையெடுப்பினால் பெரும் துன்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. பகைவரின் ஒடுக்குதலாலும் அச்சுறுத்தலாலும் பெரும் வேதனையுற்றனர். கண்ணீரே அவர்களுக்கு உணவாகவும், தாகம் தீர்க்கும் தண்ணீராகவும் மாறிற்று. அவர்கள் அண்டை நாட்டாருக்குச் சர்ச்சைப் பொருளானார்கள். அவர்களின் பகைவர் அவர்களை ஏளனம் செய்தனர். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்களினமாகத் திகழ்ந்தோர், தற்போது பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது அவர்களுக்குத் தாங்கொணா வேதனையைத் தந்தது.
இச்சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகமாகக் கடவுளை நோக்கி முறையிடுகின்றனர், “படைகளின் கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.” இந்த முறையீடு அல்லது மன்றாட்டு 80ஆம் சங்கீதத்தில் 3, 7, 19 ஆகிய வசனங்கள் என மூன்று முறை இந்த மன்றாட்டுச் சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து இஸ்ரயேலர் அடைந்த துன்பங்களையும், அவற்றிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற அவர்களின் நாட்டத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
குறிப்பாக, 80ஆம் சங்கீதம் நான்காம் வசனத்தில், கடவுளே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக “எத்தனை நாள்” (எதுவரைக்கும்- How Long) நீர் சினம் கொண்டிருப்பீர்? என்று கேட்கின்றனர். ஆண்டவரே, எதுவரைக்கும் நாங்கள் துன்புற வேண்டும்? ஆண்டவரே, எதுவரைக்கும் இதை நீர் பார்த்துக் கொண்டிருப்பீர்? ஆண்டவரே, எதுவரைக்கும் சத்துரு எங்களை நிந்திப்பான்? ஆண்டவரே, எதுவரைக்கும் நீர் மறைந்திருப்பீர்? ஆண்டவரே, எதுவரைக்கும் வலியையும் துயரையும் நாங்கள் அனுபவிக்க வேண்டும்? ஆண்டவரே, எந்த மட்டும் தேசம் புலம்பி அழ வேண்டும்? ஆண்டவரே, எதுவரைக்கும் நீர் கோபமாயிருப்பீர்? இப்படி “எதுவரைக்கும்” (How Long) என்கிற வார்த்தை இறைமக்களின் கூக்குரலாகத் திருமறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“எதுவரைக்கும்” (How Long) என்னும் இந்தக் கேள்வி, இஸ்ரயேலரின் கேள்வி மட்டுமல்ல; இன்றைய மனிதர்களின் கேள்வியும் அதுதான். ஆண்டவரே, எதுவரைக்கும் பெருந்தொற்று நோயினால் நாங்கள் துன்புற வேண்டும்? எதுவரைக்கும் பேரிடர்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்? எதுவரைக்கும் பூமி மனிதர்களின் பேராசையினாலும் சுயநலத்தினாலும் சுரண்டப்பட வேண்டும்? எதுவரைக்கும் பெண்களும் குழந்தைகளும் வன்முறைக்குப் பலியாக வேண்டும்?
வால்டர் புரூகமேன் (Walter Brueggemann) சொல்கிறார், “எதுவரைக்கும்” (How Long) என்பது துன்பத்தின் நடுவில் எழுப்பப்படும் தொன்மையான நம்பிக்கை மிகுந்த கேள்வி; இது இஸ்ரயேலரின் கேள்வி; இன வெறியால் துன்புறுத்தப்படும் கறுப்பின மக்களின் கேள்வி; இது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகிற அனைவரின் கேள்வி” என்கிறார்.
ஜேம்ஸ் மேய்ஸ் என்பவர், 80ஆம் சங்கீதத்தில் இடம்பெற்றுள்ள இந்த இறைவேண்டல் ஒன்றே ஒன்றை மட்டுமே கவனப்படுத்துகிறது. அது, “கடவுளே மானிடரின், உலகின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் துன்பங்களுக்கும் தீர்வாக, விடையாக இருக்கின்றார்” என்று சொல்லுகிறார்.
மிகுந்த சவாலான சூழலில் தவக்காலத்தை ஆசரித்துக் கொண்டிருக்கிறோம். உலகின் எல்லாத் துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் கடவுள், கிறிஸ்துவின் சிலுவை வழியாக நமக்குப் பதிலையும் தீர்வையும் தந்துள்ளார். இழந்துபோனதைத் தேடி மீட்க வந்த கிறிஸ்துவின் வாயிலாகக் கடவுள் நம்மை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளவும் அவரது முக ஒளியை நமக்குக் காட்டியருளவும் நம்மை அவர் கரத்தில் ஒப்படைப்போம்.
இறையாசி உங்களோடு இருப்பதாக!
- B. சாம் ஜெபசிங்
Comments
Post a Comment